பிரான்ஸில் இன்றும் முதல் நாளை வரை 70 சதவீத விமான சேவைகள் ரத்து
பிரான்ஸ்(France) தலைநகரான பாரிஸ்(Paris) ஓர்லி விமான நிலையத்தில் இன்று(25) முதல் நாளை(26) வரை 70 சதவீத விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, இன்று(25) அதிகாலை நான்கு மணி முதல் நாளை(26) நள்ளிரவு வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்
எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பிரான்ஸின் இரண்டாவது பாரிய விமான நிலையமான ஓர்லிக்கான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் இரண்டாவது முறை இதுவாகும்.
ஓர்லி(Orly) விமான நிலைய அதிகாரிகளுக்கும் SNCTA விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் முக்கிய தொழிற்சங்கத்திற்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தாலும், இரண்டாவது பாரிய தொழிலாளர் சங்கமான UNSA - CNA விமான நிலையத்தில் பணியாளர்கள் குறைவாகவும், பணியாளர்கள் குறைவாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலை நீடித்தால், எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் பணியை நிர்வகிப்பதற்கு நிரந்தர பணியாளர்கள் அற்றுபோக வாய்ப்புள்ளதாகவும் தற்போது ஒப்பந்த ஊழியர்களை வைத்து பணிபுரிவதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் அரசு கண்டனம்
இதனிடையே, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு பிரான்ஸ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளூர் முகவர்களின் வார்த்தைகளை நம்பி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக பிரான்ஸ் விமானப் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் பேட்ரிஸ் வெக்ரிட் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வதற்கும் தயார் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |