யாழ் மாவட்டத்தின் பிரஜாசக்தி வேலைத் திட்டத்திற்காக 652 மில்லியன் ஒதுக்கீடு
யாழ் மாவட்டத்தில் அரசாங்கத்தின் பிரஜாசக்தி வேலைத்திட்டத்திற்காக 870 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 652 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டம் யாழ். தந்தை செல்வா அரங்கில் நேற்று(11.03.2026) யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரஜாசக்தி வேலைத் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கத்தின் பிரஜாசக்தி வேலைத் திட்டமானது, கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக கிராம மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கிராம மட்டத்தில் அமைக்கப்பட்ட பிரஜாசக்தி குழுக்கள் மூலம் அந்தந்த பிரதேசங்களின் தேவைப்பாடுகள் ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
மத்திய அரசாங்கத்திடமிருந்து நேரடியாக 652 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திட்டங்களுக்கு நிதி போதாது மாகாண அமைச்சு மற்றும் மத்திய அமைச்சிடம் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்து நிதிகளை விடுவித்துக் கொள்ள முடியும்.
குறித்த திட்டத்தில் பிரதேசங்கள் நீதியாக தனியார் செயத்திட்டங்கள் மற்றும் நிதி பங்களிப்புகளை நேரடியாக பெற்று திட்டங்களை பிரதேச மட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுத்த முடியும்.

பிரஜா சக்தியின் குழுக்களின் செயலாளராக அரச அதிகாரிகளை நீங்கள் நியமித்துள்ள நிலையில் குழுக்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்குவார்கள்.
ஆகவே பிரஜா சக்தி வேலை திட்டம் கிராமப்புறங்களில் வளர்ச்சிக்கு வித்திடும் என்ற நம்பிக்கையுடன் வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திர மூர்த்தி மற்றும் பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.