சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 64 பேர் கைது (Video)
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 64 பேர் திருகோணமலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 64 சந்தேக நபர்களும் திருகோணமலை மூதூர் இலங்கை துறைமுகத்துவாரம் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை கடற்படை தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 11 பெண்கள், 3 சிறுவர்கள் அடங்கலாக மொத்தம் 64 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களைத் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் சீர்குலைந்த பொருளாதாரத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் நாட்டைவிட்டு பெரும்பாலான மக்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



