குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பெண் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி செய்தி
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பெண் பிள்ளைகளுக்கும் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபா கொடுப்பனவை இவ்வருட இறுதிக்குள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியான பிள்ளைகளைத் தெரிவுசெய்து வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வியமைச்சு முன்னெடுத்துச் செல்லும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாவத்தை பழைய பட்டய கட்டிடத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டங்கள்
இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “நமது நாட்டின் எதிர்காலத்தை பிரகாசிக்கும் முக்கிய குழுவாக தற்போதைய தலைமுறையினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்த குழந்தைகளின் எதிர்கால நல்ல கனவுகள் மலர ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்து கல்வி வசதிகளை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.
அதனாலேயே எதிர்வரும் சில நாட்களில் இந்த நன்மையைப் பெற வேண்டிய சகல பிள்ளைகளுக்கும் முறையான வேலைத்திட்டத்தின் ஊடாக 6000 ரூபா உதவித்தொகை வழங்க உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.