சென்னையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள்
சென்னையில் (Chennai) பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது.
சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உண்மைக்கு புறம்பான தகவல்கள் கூட வேகமாக பரவுகின்றன. இதை தடுக்கும் வகையில், சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சமூக வலைதளங்களை கண்காணிக்கும் பிரிவு இயங்கி வருகிறது.
யூடியூப் தளம்
இதேபோல, சென்னை பொலிஸிலும் கூடுதல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை உள்ளது.
தனிப்படை பொலிஸார், சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் மற்றும் சைபர் க்ரைம் பொலிஸாருடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
அதன்படி, சமீபத்தில் ஒரு யூடியூப் தளத்தின் செயற்பாட்டை சமூக வலைத் தள கண்காணிப்பு குழுவினர் கண்காணித்தனர். அந்த சேனலில், சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை தெரியவந்தது.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பேராசிரியர் ஹமீது உசேன் என்பவர் இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இரகசிய கூட்டங்கள்
இதுகுறித்து நடத்தப்பட்ட இரகசிய விசாரணையில், ஹமீது உசேன் மற்றும் அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல்ரகுமான் ஆகியோர் ராயப்பேட்டையில் இரகசிய கூட்டங்களை நடத்தி, அந்தக் கூட்டத்தில் பங்கேற்பவர்களை மூளைச் சலவை செய்து, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் திரட்டியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இவர்கள் உட்பட 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், பேராசிரியர் ஹமீது உசேன், பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதோடு இவர் சில காலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |