கிழக்கில் ஆறு பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளம்!
மட்டக்களப்பு, திருகோணமலை நகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகண ஆகிய 6 சுகாதாரப் பிரிவுகள் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கிழக்கில் கடந்த 24 மணித்தியாலத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1493 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ..லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேலியகொட மீன் சந்தைக்குப் பிற்பாடு, கிழக்கில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் 58 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் மூதூர் பிரதேசத்தில் ஐந்து பேருக்கும் , தம்பலகாமத்தில் ஒருவருக்கும், திருகோணமலையில் நான்கு பேருக்கும் , கல்முனை தெற்கில் எட்டு பேருக்கும் , சாய்ந்தமருதில் ஒருவருக்கும் , நிந்தவூரில் ஜந்து பேருக்கும் , ஏறாவூர் பிரதேசத்தில் மூன்று பேருக்கும் , மட்டக்களப்பு நகரத்தில் ஒருவருக்கும் , காத்தான்குடியில் 20 பேருக்கும், வெல்லாவெளி பிரதேசத்தில் ஒருவருக்கும், அம்பாறை பகுதியில் இருவருக்கும், உகண பிரதேசத்தில் ஏழு பேருக்குமாக 58 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை, அம்பாறை உகண பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டு சிறுநீரக சிகிச்சைக்காகக் கொழும்பில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதையடுத்து கிழக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரப்பகுதியில் சில கிராம சேவகர் பிரிவு, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு, திருகோணமலை நகர் பிரிவு ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே மக்கள் எவ்வாறு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்ற வகையில், அந்த தொற்று எவ்வாறு வியாபித்துள்ளது, பரவுகின்றது என்ற வகையில் தனிமைப்படுத்தல் தங்கியிருக்கின்றது.
அதனை அறியும் முகமாகத் தொடர்ச்சியாகச் சுகாதார உத்தியோகத்தர், இராணுவம், பொலிஸ், மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் இனைந்து பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
விசேடமாக இந்த பகுதியிலுள்ள மக்கள் சுகாதாரத் துறைக்கும் மற்றும் கொரோனா சம்பந்தமாகச் செயற்படுகின்ற அனைத்து தரப்பினருக்கும் ஒத்துழைப்பைப் பூரணமாக வழங்கும் பட்சத்தில் மட்டும் தான் இந்த தனிமைப்படுத்தலை மிக விரைவில் நீக்கமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 193 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் 53 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 915 பேர் உட்பட கிழக்கில் 1493 பேர் இனங்காணப்பட்டனர். இதில் 595 தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவற்றில் 915 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கிழக்கில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. எனவே தொடர்ச்சியாக மக்கள் சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருமாறு அவர் கேட்டுக்கொண்டதுடன் டெங்கு நுளம்பின் தாக்கம் மட்டக்களப்பில் சில சுகாதார அதிகாரிகள் பகுதிகளில் அதிகரித்து வருகின்றது.
எனவே இந்த கொரோனா மற்றும் டெங்கு நோய் தாக்கம் ஆகிய இரு நோய் தாக்கத்திற்கும் இடையிலான இக்கட்டான நிலையிலிருந்து வருகின்றோம்.
எனவே, பொதுமக்கள் தமது வீடுகளைச் சுகாதாரமாகப் பேணி டெங்கு நுளம்பை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.