தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின் சுமார் 57 நீதிபதிகள் பணி இடைநீக்கம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த சுமார் 57 நீதிபதிகள் அண்மைக்காலத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
மற்றொரு நீதிபதிகள் குழு தற்போதைக்கு கட்டாய விடுமுறையில் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் கொழும்பு கோட்டை முன்னாள் மாஜிஸ்திரேட் திலின கமகே, மஹியங்கனை மேலதிக மாவட்ட நீதிபதி ரங்கனி கமகே, மட்டக்களப்பு முன்னாள் நீதவான் முகமது ஹம்சா மற்றும் வெள்ளவாய நீதவான் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவியல் குற்றச்சாட்டுகள்
கடந்த வருடம் ஜுலை மாதம் தொடக்கம் இந்த வருடத்தின் ஜுலை வரையான காலப்பகுதிக்குள் மேற்கண்ட பணி இடைநீக்க செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக யானைக்குட்டியொன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், அப்போதைய மொரட்டுவ மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய திலின கமகேவை நீதிச் சேவை ஆணைக்குழு இடைநீக்கம் செய்துள்ளது.
முன்னதாக, 2016-ஆம் ஆண்டில், அப்போதைய கொழும்பு மாஜிஸ்திரேட்டாக இருந்த திலின கமகே இதே குற்றச்சாட்டுகளின் பேரில் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2021ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் அதே குற்றவியல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
திலிண கமகேவின் நீதித்துறை அலுவலகத்தின் நேர்மை மற்றும் ஒழுக்கம் குறித்து நீதித்துறை சேவை ஆணைக்குழு நடத்தும் உள்ளக விசாரணைகளை மேற்கொள்வதற்கான நிபந்தனையின் பேரில் அவர் இந்த அரசாங்கத்தின் கீழ் இரண்டாவது முறையாக மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக சரியான தனிப்பட்ட தகவல்களை மறைத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் பயிற்சி பெற்று வந்த மூன்று பயிற்சி நீதிபதிகளும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.