இலங்கைக்கு காத்திருக்கும் சவால்: உற்றுநோக்கப்படும் ஐ.நாவின் ஊடாடும் உரையாடல்
ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை, அமர்வுகள் ஆரம்பிக்கும் செப்டம்பர் 11 ஆம் திகதி முற்பகல் வெளியிடப்படும்.
இதன் பின்னர், அந்த அறிக்கை, பிற்பகலில் ஊடாடும் உரையாடலுக்கு முன்வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் பதில் அறிக்கை
இந்த அறிக்கையின் நகல் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நாளைய தினம்(05.09.2023) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வைத்து இலங்கையின் பதில் அறிக்கை வெளியாகவுள்ளது.
இன நல்லிணக்கச் செயற்பாடுகள், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தல், மாகாண சபைகளை வலுப்படுத்துதல், காணி சீர்திருத்தங்கள், கைதிகள் விடுதலை மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டம் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இது கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் இலங்கையில் 'ஜனநாயக இடம்' சுருங்குவது பற்றிய தீவிர அக்கறை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.