எரிபொருள் தட்டுப்பாடு! மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
எரிபொருள் தட்டுப்பாட்டினால் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் கிலோ கிராம் மரக்கறிகள் மற்றும் பழங்கள் பழுதடைவதாக தேசிய மரக்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள 13 விசேட பொருளாதார நிலையங்களுக்கு சுமார் 3 இலட்சம் விவசாயக் குடும்பங்கள் தமது விளைச்சலை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, நேற்று (29) மாத்திரம் சுமார் 20 இலட்சம் கிலோகிராம் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்த போதிலும் வியாபாரிகள் வருகை தரதாத காரணத்தினால் போட்டித் தன்மை குறைந்து மரக்கறி விலைகளும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மரக்கறிகள் அழிவு
பாரவூர்தி உரிமையாளர்களுக்கு வாரத்தில் குறைந்தது 4 நாட்கள் டீசல்கிடைக்காத காரணத்தினால் அவர்கள் சந்தைகளுக்கு வருகை தருவதை தவிர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மரக்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு அவை பழுதடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நேற்றைய நிலவரத்தின் படி, கறிமிளகாய் 120 ரூபாய்க்கும் தக்காளி 30 முதல் 40 ரூபாய்க்கும் பீட்ரூட் மற்றும் கோவா 40 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 80 முதல் 100 ரூபாய்க்கும் காலிபிளவர் 80 முதல் 100 ரூபாய்க்கும் மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.