வடகொரிய சிறுவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை: மீறினால் 5 ஆண்டுகள் சிறை...!
வடகொரியாவில் ஹொலிவூட் படங்கள் மற்றும் தென் கொரியாவின் திரைப்படங்களைப் பார்க்கும் சிறுவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சிறுவர்களின் பெற்றோர்கள் 6 மாதக்கால தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் மற்றும் தென் கொரியப் பழக்கவழக்கங்களைக் கடுமையாகத் தவிர்க்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், அந்த நாட்டு மக்களும் அதனையே பின்பற்ற வேண்டும் என்று சட்டங்களைக் கொண்டு வருகிறார். இதனைச் சர்வதேச நாடுகள் விமர்சித்து வருகின்றன.
5 ஆண்டுகள் சிறை
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் படங்களைத் தடுக்கும் வகையில் புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நாடு வெளியிட்டுள்ளது. இதன்படி, ஹொலிவூட் அல்லது தென்கொரிய படங்களைச் சிறுவர்கள் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறிப் பார்க்கும் சிறுவர்கள், 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பெற்றோர்கள் 6 மாதம் தொழிலாளர் முகாம்களில் அடைக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைக் கண்காணிக்கத் தனிக் குழுக்களையும் அமைத்துள்ளதாகவும், மேற்கத்திய ஊடகங்களின் ஊடுருவலைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன், அங்கு திரைப்படங்களுக்கு மட்டுமல்ல நடனம், பாடல் பாடுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முந்தைய காலங்களில், குற்றம் நிரூபிக்கப்படும் பெற்றோர்கள் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இனிமேல் கருணை காட்டப்படாது எனக் கூறப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் சமூக கொள்கைப்படி சிறுவர்களை வளர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
May you like this Video




