யாழ்.உடுவில் பிரதேச செயலக பிரிவில் உள்ள 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை!
உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது.
நேற்று(16) நடைபெற்ற உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் துறை சார் அதிகாரிகளினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது.
போதைப்பொருள் பாவனை
அந்த அதிகாரி இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 32 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 5 பாடசாலைகளில் போதைப் பொருளை பயன்படுத்துகின்ற மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்ப விவரங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, அந்த மாணவர்களின் குடும்பங்களில் உள்ள பெண்களும் போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களாக உள்ளமை தெரியவந்துள்ளது.
உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முப்பது கிராம சேவையாளர் பிரிவுகளில் 5 கிராம சேவையாளர் பிரிவு போதைப்பொருள் தொடர்பான அடையாளப்படுத்தப்பட்ட பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளது.
மேலும் இவ்வருடம் தை மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் தொடர்பான முறைப்பாடுகளாக குறிப்பாக, பாடசாலை இடைவிலகல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொடர்பு, குடும்ப வன்முறை உள்பட 67 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த முறைப்பாடுகள் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சட்ட ரீதியான நடவடிக்கை
ஆகவே குறித்த பிரதேச பகுதிகளில் வழி தவறி செல்லுகின்ற பாடசாலை மாணவர்களை சரியான வழியை காட்டுவதற்கும், ஏனைய மாணவர்களை விழிப்படையச் செய்வதற்கும் அனைத்து தரப்பி னர்களையும் உள்ளடக்கிய ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா, குறித்த அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை பார்க்கும்போது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது.
பொலிசார் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
விரைவில் அதை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
