கிளிநொச்சியில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவை: கிருஸ்ணரூபன்
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணரூபன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக எமது பேருந்து சேவைகளை உரிய முறையில் நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
முக்கியமாக மக்களை ஏற்றியவாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொள்வதனால் அந்தந்த நேரங்களிற்கு மக்களிற்கான சேவையைச் செய்ய முடியாதுள்ளது.
இந்த நிலை தொடர்ந்து அடுத்த வாரமும் இருக்குமாயின் எமது சேவையை மட்டுப்படுத்திச் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.
இதேவேளை எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால், அக்காலப் பகுதியில் எங்களால் வழமைபோன்ற முன்னெடுக்கப்படுகின்ற பாடசாலை சேவைகளையும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.
இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேரில் சென்று கடிதம் ஒன்றை வழங்கியுள்ளோம்.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அடித்தட்டு மக்கள் அதிகமாக வாழ்கின்ற மாவட்டம். தனிப்பட்ட வாகனங்களைப் பாவிப்பதைவிட இவ்வாறான பொது போக்குவரத்தினையே அதிகளவான மக்கள் பாவிக்கின்றனர்.
குறிப்பாகப் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை மற்றும் அன்றாட வேலைகளிற்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பேருந்து சேவையையே பயன்படுத்தி வருகின்றனர்.
பொது போக்குவரத்தினை பொதுவாகச் செய்வதற்கு முன்னுரிமை அடிப்படையில் இப்பேருந்துகளிற்கு அன்றாடம் தேவையான எரிபொருளைக் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வழங்குவதற்கு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் முன்வர வேண்டும் என இந்த ஊடக சந்திப்பின் ஊடாக வேண்டுகை விடுக்கின்றேன்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 80 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றது. குறித்த சேவைகளிற்காக நாள் ஒன்றுக்கு சுமார் 4000 லீட்டர் எரிபொருள் எமது சங்கத்திற்குத் தேவைப்படுகின்றது.
இவ்வாறு தேவைப்படும் எரிபொருளை ஒரு வாரத்துக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து பொது போக்குவரத்திற்கு வழங்குவதற்கு அரசாங்க அதிபர் ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.
அவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்படின் மாத்திரமே அடுத்தடுத்த நாட்களில் சேவைகளை மேற்கொள்ள முடியும். இலங்கை போக்குவரத்து சபைகூட இன்று மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளையே செய்கின்றன.
ஆனால் நாங்கள் கையிருப்பில் உள்ள எரிபொருளையும், வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளும் எரிபொருளையும் பயன்படுத்தி சேவைகளைச் செய்து வருகின்றோம்.
இவ்வாறான நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பகலாயினும் சரி இரவாகினும் சரி பொருத்தமான ஒரு நேரத்தை ஒதுக்கீடு செய்து பேருந்துகளிற்கு அல்லது கொண்டு வரமுடியாத நிலையில் உள்ள பேருந்துகளிற்கான எரிபொருளைக் கொள்கலன்களில் வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன. அவ்வளிகள் ஊடாக எமது தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
எம்மால் கூரப்பட்ட இந்த 4000 லீட்டர் எரிபொருளை இப்பத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பங்கிட்டுப் பெற்றுக்கொள்ள அரசாங்க அதிபர் ஆவண செய்து உதவ வேண்டும் எனக் கோருகின்றோம்.
அவ்வாறு பெறப்படும் எரிபொருளை எமது சங்கத்தின் சிபாரிசின் மூலம் அளவுத்திட்டத்திற்கு அமைவாக எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பொது போக்குவரத்து சேவை முழுமையாக இடம்பெறுவதற்கு எரிபொருள்
நிரப்பு நிலைய உரிமையாளர்கள் உதவ வேண்டும் என நான் மீண்டும் மீண்டும் நான்
இந்த ஊடக சந்திப்பின் ஊடாக கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.



