வரலாற்றில் மிகப்பெரிய மசகு எண்ணெய் வெளியீடு: சர்வதேச அளவில் பெரும் நெருக்கடி உருவாகும் சூழல்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் காரணமாக உலக அளவில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச எரிசக்தி முகவரகம் (IEA) தனது உறுப்பு நாடுகளின் அவசரகால கையிருப்பிலிருந்து சுமார் 40 கோடி (400 மில்லியன்) பெரல் மசகு எண்ணெயை சந்தையில் வெளியிட முடிவு செய்துள்ளது.
வரலாற்றில் மிகப்பெரிய வெளியீடு
இது அந்த அமைப்பின் வரலாற்றிலேயே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய வெளியீடாகும். குறிப்பாக, ஈரானின் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் அமெரிக்கா மட்டும் சுமார் 17.2 கோடி பெரல்களை வழங்க முன்வந்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை எண்ணெய் விலையைக் குறைக்கப் போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு நாளைக்குச் சந்தையில் ஏற்படும் பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில், இந்த 40 கோடி பெரல்கள் என்பது சில நாட்களுக்கான தேவையை மட்டுமே ஈடுகட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
மசகு எண்ணெய் விலை
மேலும், இந்த அறிவிப்பு வெளியான பின்னரும் மசகு எண்ணெய் விலை பெரல் ஒன்றுக்கு 100 டொலருக்கும் அதிகமாகவே நீடிக்கிறது. போர் நீடித்தால், எண்ணெய் விலை பெரலுக்கு 200 டொலர் வரை உயரக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதனால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், சர்வதேச அளவில் ஒரு பெரும் எரிசக்தி நெருக்கடி உருவாகும் சூழல் நிலவுகிறது.