மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகள் விபரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் நான்கு அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இறுதி தினமான இன்றுடன் மொத்தமாக 19 கட்சிகளும் 25 சுயேட்சைக்குழுக்களுமாக 139 போட்டி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுக்கள் விபரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்திலுளள உள்ளூர் அதிகார சபைகளில் போட்டியிட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் தேசிய மக்கள் சக்தி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது.
இதேவேளை காத்தான்குடி தவிர ஏனைய மாவட்டத்தில் உள்ள 11 சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையிலும் தேசிய மக்கள் சக்தி கல்குடா தொகுதியில் உள்ள சபைகளில் போட்டியிட அதன் அமைப்பாளர் எம். திலீப் குமார் தலைமையிலும் வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.
இதேநேரம் மட்டக்களப்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி அதன் அமைப்பாளர் ரகுராம் தலைமையில் இன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் விபரம்
இதேபோன்று மக்கள் போராட்ட முன்னணியும் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளது.
அத்துடன் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் சம்பிக்க ரணவக்கவின் கட்சியும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
இதேநேரம் மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகளில் போட்டியிடுவதற்கான பல சுயேச்சை குழுக்கள் நியமன பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் அடங்கலாக மாவட்டத்தில் 12 உள்ளுராட்சிமன்ற சபைகளுக்காக தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.