மகனைக் காப்பாற்றிய தந்தை உட்பட 4 பேர் பலியான சோகம்: தமிழகத்தில் சம்பவம்
கிணற்றில் தவறி விழுந்த பாடசாலை மாணவர்கள் 3 பேரைக் காப்பாற்ற முயன்ற நபர் உட்பட 4 பேர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (02.07.2023) காலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தின் - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ளது மெட்டாலா கணவாய்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் குப்புசாமி என்பவரது மகன் அபினேஷ் (வயது 15). அப்பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் வகுப்பு கற்று வருகின்றார்.
100 அடி ஆழம் கொண்ட கிணறு
அதே பாடசாலையில் கற்று வரும் தனது நண்பர்களான கம்மாளப்பட்டியை சேர்ந்த நிதீஷ்குமார் (வயது 15), சமத்துவபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (13) ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார்.
அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வாகனம் நிலை தடுமாறியதில், அதில் வந்த சிறுவர்கள் மூவரும் வீதியோரத்தில் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர்.
சேற்றில் சிக்கிய நான்கு பேர்
தகவல் அறிந்த கணவாய்பட்டி பகுதியை சேர்ந்த மாணவர் அபினேஷின் தந்தை குப்புசாமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன், அசோகன் ஆகியோர் மாணவர்களை மீட்பதற்காகக் கிணற்றில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி கிராம மக்கள் ராசிபுரம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கட்டிலை இறக்கி மாணவர்கள் அபினேஷ், நிதீஷ்குமாரை உயிருடன் மீட்டுள்ளனர்.
மற்றவர்கள் களிமண் சேற்றுக்குள் சிக்கியதாகத் தெரிகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் முழுவதும் கசிந்து கிணற்று நீரில் கலந்த நிலையில், அதைப் பருகியதால் சேற்றில் சிக்கிய நான்கு பேரும் மயக்க நிலை அடைந்ததாகத் தெரிய வருகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |