சட்டவிரோதமாக தங்கம் தேடி நிலத்தை தோண்டிய நால்வர் கைது (Photo)
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஒல்லிக்குளம் பிரதேசத்தில் தங்கம் தேடி நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வரை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை நேற்று (19) நள்ளிரவு கைது செய்யப்பட்டு, காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய, குறித்த பகுதியிலுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றினை களவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
இதன் போது, அங்கு நிலத்தில் தங்கம் இருப்பதாக நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நிலத்தை தோண்ட பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு, சவால் போன்ற ஆயுதங்களையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.