வெளிநாடு ஒன்றிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்படவுள்ள 4 இலங்கையர்கள்
இஸ்ரேலுக்கு பணிக்காக சென்ற 4 இலங்கையர்கள் திருட்டு குற்றச்சாட்டில் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், மதுபான போத்தல்கள், கமராக்கள் மற்றும் தங்கம் என்பன அடங்குவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
லெபனான் எல்லையில் உள்ள வடக்கு இஸ்ரேலின் நஹாரியா பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் பணிபுரியும் நான்கு இலங்கையர்கள் இஸ்ரேலிய வீடுகளை உடைத்து திருடியதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு சம்பவம்
அவர்கள் நஹரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுவார்கள் எனவும் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளினால் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இதன் காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் போது தாயகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் யுத்த மோதல்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகளை வழங்க இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இவ்வாறான சூழ்நிலைகளால் அந்த தொழில் வாய்ப்புகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |