நாடளாவிய ரீதியில் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video)
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகம் - வந்தாறுமூலை மாணவர்கள் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தின் முன் இடம்பெற்றது.
வவுனியா
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல் நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (21) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன், இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தது.
மன்னார்
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மாலை 6 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது குறித்த தற்கொலை குண்டு தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களை நினைவுகூரும் வகையில் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலையகம்
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் பல இடங்களிலும் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவில் புனித சவேரியார் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி விசேட ஆராதனைகள் இடம்பெற்றுள்ளது.
ஆலய வளாகத்தில் அருட்தந்தை சுகத் ரோகன தலைமையில் காலை 8.45 மணிக்கு ஆலய மணி ஓசை எழுப்பப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு, தற்கொலைக் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதி வேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் இதன்போது முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் தமது எதிர்ப்பை மக்கள் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கான நினைவு தின விசேட ஆராதனைகள் மட்டக்களப்பின் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.
இவ் நினைவு தின விசேட ஆராதனைகள் மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்திலும் காந்திபூங்கா மற்றும் கல்லடி பாலத்துக்கருக்கிலுள்ள நினைவு தூபிகளிலும் இன்று காலை 9.05 மணிக்கு இடம்பெற்றுள்ளன.
இந்த நினைவேந்தல்களில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்படப் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன், 93 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு குண்டுவெடிப்பு இடம்பெற்ற சீயோன் தேவாலயத்தின் போதகர் ரொசான் மகேசன் தலைமையில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இடம்பெற்ற விசேட ஆராதனையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆராதனையில் ஈடுபட்டு அஞ்சலி செலுத்தினர்.
அதேவேளை மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவான் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு தூபியில் மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு - கல்லடி பாலத்துக்கு அருகில் தேவாலய குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் உறவுகளால் அமைக்கப்பட்ட தூபியில் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மலர் வலையம் வைத்துச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.