கிழக்கு மாகாணத்தில் 24 மணித்தியாலத்திற்குள் 38 புதிய தொற்றாளர்கள் அடையாளம்
கிழக்கு மாகாணத்தில் 38 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் 1323 நபர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 802 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதாகவும் 539 நபர்கள் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஏழு மரணங்கள் கொரோனா தொற்று காரணமாக இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 173 நபர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 நபர்களும் இனங் காணப்பட்டுள்ளதாகவும், அம்பாறை பிராந்தியத்தில் 34பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதாகவும், அதிகளவில் கல்முனைப் பிராந்தியத்தில் 752 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் கல்முனை நகர்ப் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் சுகாதார திணைக்கள விடுக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்குமாறும், வெளி இடங்களிலிருந்து வருபவர்கள் தொடர்பாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு, அல்லது காவல் துறையினருக்கு அறிவிக்குமாறும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்