நாட்டை விட்டு வெளியேறியுள்ள 38 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள்
இலங்கையின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் 38 பேர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அண்மைய காலத்தில் நாட்டை விட்டு சென்றுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துவதில் சிரமம்
இலங்கையில் கிடைக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை கொண்டு நடத்துவது சிரமம் என்பதால், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். வேறு நாடுகளில் சிவில் விமான சேவை நிறுவனங்கள் அதிகளவிலான சம்பளம் மற்றும் வசதிகளை வழங்குவதன் காரணமாக இவர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலைமை காரணமாக இலங்கையில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளளது.
அனைத்து துறைகளிலும் இது பொதுவான நிலைமை-நிமல் சிறிபால டி சில்வா
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள துறைமுகங்கள்,கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது தற்போது நாட்டின் அனைத்து துறையிலும் காணப்படும் பொதுவான பிரச்சினை எனக்கூறியுள்ளார்.
புதிதாக 25 விமான போக்குவரத்து கட்டுப்பாளர்கள் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல விமானிகள் கடந்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத்தின் தகவல்கள் கூறுகின்றன.