ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்(Photos)
தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வு இன்று(05.05.2023) மட்டக்களப்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவுநாள் நிகழ்வுகள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மலர் தூவி அஞ்சலி
இதன்போது சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர், மண்முனை தென் எருவில் பற்று தவிசாளர் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கோவிந்தன் கருணாகரனின் கருத்து
தமிழ் மக்களுக்கான தீர்வினை வலியுறுத்தவேண்டிய காலம் என்பதனால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றுபடுமாறு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.
சிறிசபாரட்னம் ஒற்றுமையாக நாங்கள் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப்பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தாரோ அதேநோக்கத்துடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தற்போதைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஒற்றுமையினை முன்னிறுத்திவருகின்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலமிருந்து இன்று வரையுள்ள கட்சியாக ஒரு இயக்கமாக தமிழீழ விடுதலை இயக்கம் இருக்கின்றது. நாங்கள் எங்கள் தலைவரை இழந்தாலும் கூட தமிழீழ விடுதலைப்புலிகளுடன் கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து தமிழ் மக்களுக்காக நாங்கள் ஒன்றாக செயற்படுவோம் என்று உறுதியாக செயற்பட்டுவருகின்றோம்.
2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் எந்த பலமும் இல்லாத நிர்க்கதியாக நிற்கும் இந்தவேளையில் நாங்கள் பலமாக ஒற்றுமையாக இருக்கவேண்டிய நேரத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பல பிளவுகள் காணப்படுகின்றது.
நில ஆக்கிரமிப்பு
இன்று வடகிழக்கில் ஆயுதப்பலம் இல்லாத காரணத்தினால் இலங்கை அரசாங்கத்தினால் எமது நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவருகின்றது. 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையின் இன்று அதிகாரங்கள் இல்லாமல் ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றது.
ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக இருக்கும் ஆளுனர்கள் தாங்கள் நினைத்தவற்றை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
நேற்று முன்தினம் கூட நூறு வீதம் தமிழர்கள் வாழும் வடக்கின் தையிட்டி பகுதியிலேயே விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கமானது 13வது திருத்ததின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபையின் முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை தேர்தலை நடாத்தவேண்டும் என்ற அழுத்ததினை வழங்கவேண்டும்.
சரத்வீரசேகர,விமல்வீரவன்ச போன்ற இனவாதிகள் 13வது திருத்த சட்டமும்வேண்டாம் அதன்ஊடாக வந்த மாகாணசபையும் வேண்டாம் என்கிறார்கள்.வடகிழக்கில் அதேகொள்கையுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செயற்படுகின்றது.
ஆனால் இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டுமானால் மாகாணசபையின் முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் மிக விரைவாக நடாத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாகயிருக்கின்றோம்.
இக்கட்டான தருணம்
நாங்கள் இன்று ஒன்றாகயிருக்கவேண்டிய காலம், ஒற்றுமையாகயிருக்கவேண்டிய காலம். தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட இன்று பிரிந்துகிடக்கின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்துசென்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாகி நாங்கள் எமது உரிமைகளை பெறுவதற்காக போராடவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை அனைத்துதமிழ் தரப்பினரும் உணரவேண்டும்.
மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சியை வளர்ப்பதற்காக மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துவிதமான அட்டூழியங்களையும் அனைவரும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும்.
வடக்கில் காலை வைத்துவிட்டார்கள். இந்தியா தனது பாதுகாப்பினையும் தமிழ் மக்களினது உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கு மேலும்மேலும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.
பொருளாதார ரீதியாக மீட்சிபெறுவதற்கு உதவிய இந்தியா,தமிழ்
மக்களின் உரிமையினை பாதுகாப்பதற்கு முழு அதிகாரத்தினையும் பரவலாக்கி மாகாணசபை
தேர்தலை மிக விரைவாக நடாத்துதற்கு உறுதிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.