ஜனவரிக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்.டொலர் அவசியம்: 150 மில். டொலர் மட்டுமே கையிருப்பில்
எதிர்வரும் நாட்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பற்றாக்குறையாக இருக்கும் பணத்தை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் நாட்டின் பயன்பாட்டுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்லியன் டொலர்கள் அவசியம். தற்போது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் 150 மில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.
இதனால், ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பற்றாக்குறையாக இருக்கும் 200 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளேன்.
அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் இருக்கின்றது.
எவ்வாறாயினும் பற்றாக்குறையாக இருக்கும் தொகையை அமைச்சரவை வழங்கும் என நம்புகிறேன் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சிங்கள வானொலி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர் கம்மன்பில, ஜனவரி மாத நடுப்பகுதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
