ராஜீவ் காந்தியை கொலை செய்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய தவறு : இந்திய ஊடகம்
இந்தியாவில் 33 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் தற்கொலை குண்டுதாரியால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும், இதற்கு பொறுப்பு என்று கூறி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தாக்கங்களையும் இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
மே 21, 1999 தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுவதற்காக ராஜீவ் காந்தி சிறிபெரும்புதூருக்கு வந்தபோதே மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
இந்த கொலையை தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான தானு என்பவரே மேற்கொண்டார் என்பது இந்திய விசாரணையாளர்களால் வெளிக்கொணரப்பட்டது.
எனினும் இறுதி வரை தமிழீழ விடுதலைப்புலிகள் அந்த கொலைக்கான பொறுப்பை ஏற்கவில்லை. மாறாக அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறிவந்தனர்.
இந்தநிலையில் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான இந்திய அரசியலின் போக்கை, இந்த கொலை சம்பவம் மாற்றியதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட்ட போராளி அமைப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வந்தது.
இது இந்தியாவுக்கும் பிரச்சினையாக மாறியது. இந்த சூழ்நிலையில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தனவுக்கும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உத்தேசம் இல்லாத நிலையில், இந்தியா தலையிட்டது.
உடன்படிக்கை மூலம் சமரசம்
இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் உணவுப்பொதிகளை இலங்கையின் வடக்குக்கு விமானங்கள் மூலம் போட்டதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை வழிக்கு வரச்செய்தது.
இதனையடுத்து உடன்படிக்கை ஒன்றின் மூலம் சமரசம் செய்து வைக்கப்பட்டது.
இந்த உடன்படிக்கைக்காக ராஜீவ் காந்தி இலங்கைக்கு வந்தபோது இலங்கையின் படை உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டார்
அந்த உடன்படிக்கையை காக்கும் வகையில், இந்திய அமைதிப்படையினரும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
எனினும் பின்னர் வந்த நாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்கும் இடையில் போர் வெடித்தது.
தேர்தலில் தோல்வி
இந்திய படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்ட அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளால் 1200 இந்திய படையினரும் கொல்லப்பட்டனர்.
ராஜீவ் காந்தி, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரியானார். இதுவே ராஜீவ் காந்தியின் கொலைக்கு காரணமாக அமைந்தது.
இந்தநிலையில் 1989ல் ராஜீவ் காந்தி தேர்தலில் தோல்வியடைந்தார்.
1990 இல் இந்திய துருப்புக்களும் இலங்கையின் வடக்குகிழக்கில் இருந்து இந்தியாவினால் திருப்பியழைக்கப்பட்டன
1991ஆம் ஆண்டு ராஜீவ் கொலையானது விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்ய வழிவகுத்தது. அத்துடன் இந்தியாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் அது அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான கொழும்பின் பிரசாரத்தை ஆதரிக்கத்தொடங்கியது. அத்துடன் உலக நாடுகளும் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்தன.
இந்த அடிப்படையிலேயே 2009ஆம் ஆண்டில் இறுதிப்போரின் போது இந்தியா உட்பட்ட உலக நாடுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவளித்தன என்று இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |