மன்னார் மாவட்டத்தில் 15 நாட்களில் 328 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 25 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் கோவிட் நிலவரம் தொடர்பாக இன்றைய தினம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (R.Vinodhan) விடுத்துள்ள நிலவர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் (15) மேலும் 25 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 15 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 328 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் 2704 தொற்றாளர்களும், தற்போது வரை 2721 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 25 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை தலை மன்னார் பகுதி தபாலகத்தில் கடமை புரியும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் பலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தபாலகம் மூடப்பட்டுள்ளது.
அண்மையில் மன்னார் பகுதியில் தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து தலைமன்னார் பகுதி தபாலகத்தை சேர்ந்தவர்களுக்கு நேற்று காலை தலை மன்னார் வைத்தியசாலையில் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தலைமன்னார் தபாலகத்தில் கடமையாற்றும் 07 ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தலைமன்னார் தபாலகம் உப தபாலகங்கள் நேற்று மதியம் 12 மணியுடன் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

