திருடரை பாதுகாக்கும் சஜித் - ராஜபக்ச கூட்டணி! கடும் தொனியில் பிமல்
ராஜபக்சர்ளை கைது செய்ய முற்படும் போது சஜித் தரப்பினர் கவலை வெளியிடுவதும், அவர்களை பாதுகாக்க முற்படுகின்றமையும் பெரிய திருடரை பாதுகாக்க ஒன்றிணைந்து மேற்கொள்ளும் செயற்பாடு என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake ) தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் எதிர்கட்சியினர் மேல் மாகாண ஆளுநருக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையே முன்னெடுத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவை சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சவால் விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாச
குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் அவர்களை பாதுகாக்க முற்படுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையில் சஜித் பிரேமதாச தற்போது யாருடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பதை மக்களுக்கு கூற வேண்டும். எமக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையுடன் எவரும் விளையாட வேண்டாம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“ராஜபக்சர்ளை கைது செய்ய முற்படும் போது சஜித் தரப்பினர் முணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
யோஷித்தவை கைது செய்யும் போது எதிர்க்கட்சியின் ஹர்ஷன ராஜகருணாவுக்கு கவலை ஏற்படுகிறது.
யோஷித விவகாரம்
இரண்டு பக்கத்திலும் உள்ள திருடர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் பெரிய திருடரை பாதுகாக்க ஒன்றிணைந்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக யோஷிதவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு முடியாமல் போனது. அதேபோன்று நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாமல் போயுள்ளது.
44 கோடி ரூபா பணத்தை பயன்படுத்தி வீட்டை திருத்தும் பணிகளை செய்துள்ளனர். இவ்வளவு பணம் செலவழித்து அவ்வாறு செய்ய முடியுமா?
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே இந்த நாடு வங்குரோத்து அடைந்தது’’ என பிமல் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
