விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து கருத்துக்களை முன்வைத்துவிட்டு விசாரணைக்கு செல்ல அச்சமடையும் எம்.பிக்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(11) நடைபெற்ற அமர்வின் போது பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,''கொள்கலன்கள் தொடர்பில் பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள்.
ஆயுதங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாகவும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்கள்.
இந்நிலையில் எவ்வாறு அந்த கருத்து தொடர்பில் விசாரிக்காமல் இருக்க முடியும்.விசாரணைகளுக்கு செல்ல இவர்கள் ஏன் அச்சமடைகிறார்கள்.
நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு ஏதும் கூற முடியுமா, பொய்யுரைக்க முடியுமா? நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்துக்குள்ளும், பேச்சுரிமையை பயன்படுத்திக் கொண்டு வெளியிலும் பொய்யுரைக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். நாடாளுமன்றத்தில் அதை குறிப்பிட்டு கூச்சலிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
கொள்கலன்கள் விடுவிப்பு
323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள்.
நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள். கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை.
பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது.நாடாளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.''என கூறியுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
