மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 305 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்! - வைத்தியர் ரி.வினோதன்
மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 11230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 305 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 17 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மன்னார் மீன் சந்தை பகுதியில் மீன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 5 பேர் ஏற்கனவே கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நுண்கடன் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் இருவர் மாந்தை மேற்கு பகுதியில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் முதல் நிலை தொடர்பாளராகவும், ஒருவர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் கடமையாற்றியவரோடு நெருங்கிப் பழகியவராகவும், மேலும் ஒருவர் கர்ப்பிணிப் பெண் ஒருவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் முசலி பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 83 பி.சி.ஆர்.பரிசோதனைகளின்போது எவருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 305 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் 288 நபர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த மாதத்தில் 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 11230 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாதம் 683 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் சுமூகமான முறையில் இடம்பெற்றுள்ளது.
முதல் நிலை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்த மூன்று மாணவர்கள் சுகாதார பிரிவின் போக்குவரத்து வசதி ஊடாக குறித்த பரீட்சையில் தோற்றி இன்றைய தினம் பரீட்சையை நிறைவு செய்துள்ளனர்.
நாளைய தினம் மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இடம்பெற உள்ள மஹா சிவராத்திரி நிகழ்வானது மட்டுப்படுத்தப்பட்ட அளவு பக்தர்களுடன் கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற உள்ளது.
இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.