சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த மூவர் கைது - 65 கடல் அட்டைகள் மீட்பு
மட்டக்களப்பு கல்குடா கடலில் சட்டவிரோதமாகப் படகு ஒன்றில் கடல் அட்டை பிடித்துக்கொண்டிருந்த 3 மீனவர்களை கைது செய்துள்ளதாக வாகரை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வாகரை கடற்படை முகாம் கடற்படை புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடற்படையின் கடலோர பாதுகாப்பு திணைக்கள பிரிவு அதிகாரிகளின் உதவியோடு சம்பவதினமான நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் கல்குடா கடலில் வைத்து 3 பேரைக் கைது செய்ததுடன், படகு மற்றும் 65 கடல் அட்டை, ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ஏனைய கடல் தொழில் உபகரணங்கள் என்பனவற்றை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனவும் இவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

