பொதுத் தேர்தலின் போது பெண் உட்பட மூவர் மரணம் - பொலிஸார் வெளியிட்ட தகவல்
பொதுத் தேர்தலுக்கான கடமையில் இன்று ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடக பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர்கள் உயர்ழந்துள்ளதாக நம்பப்படுகிறது.
மூவர் மரணம்
கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கெஸ்பேவ பிரதேசத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலைய பிரதானியாக நியமிக்கப்பட்டிருந்த 48 வயதுடைய பெண் ஒருவரும் கடமையில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொபேகனே பிரதேசத்தின் வாக்களிப்பு நிலையத்தில் பணியாற்றிய 57 வயதுடைய ஒருவரும் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.
மூன்று அதிகாரிகளும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் மரணங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.