கஞ்சா வியாபாரி உட்பட இருவர் கைது - முச்சக்கரவண்டி ஒன்று மீட்பு
மட்டக்களப்பு - காத்தான்குடியில் சிறைத்தண்டனை பெற்ற கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை முற்றுகையிட்டு அங்கிருந்து 2 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவுடன் கஞ்சா வியாபாரி உட்பட இருவரைக் கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தலைமையிலான பொலிஸார், இராணுவ புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று(12) 10 மணியளவில் காத்தான்குடி பீச் வீதியிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு முச்சக்கரவண்டியில் மறைத்துவைத்திருந்த 2 கிலோ 20 கிராம் கேரள கஞ்சாவை மீட்டதுடன், கஞ்சா வியாபாரியுடன் 46 வயதுடையவர் ஒருவர் உட்பட இருவரைக் கைது செய்துள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரியான கஞ்சா வியாபாரி மிக நீண்டகால போதைப்பொருள் வியாபாரியும் எனவும் போதைப்பொருள் விற்பனைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் காத்தான்குடியைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும் இவர் ஓட்டமாவடி, வாழைச்சேனை தொடக்கம் ஏறாவூர், காத்தான்குடி வரை கேரளா கஞ்சா மற்றும் போதைப்பொருள் ஏக வினியோகஸ்தராகச் செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







