வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி!
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் இன்று கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 21 பெண்களும், 7 ஆண்களும் அடங்குவதுடன் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாகத் தெரியவருகிறது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்பைப் பேணிய 60 பேருக்குக் கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
