ஓட்டமாவடியில் டிசம்பர் மாதம் மாத்திரம் 268 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு! சுகாதார வைத்திய அதிகாரி
ஓட்டமாவடியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டிசம்பர் மாதம் மாத்திரம் 268 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்துக் காணப்படும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடும் இன்று வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இதில் வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர்த் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்குப் பிறகு இவ்வாறு சுத்தம் இல்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், ஓட்டமாவடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 24ம் திகதி வரை 747 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணித்துள்ளதாகவும், இந்த மாதம் 268 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, சமூக மட்ட அமைப்புக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.