சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசித்த 26 வயது இளைஞர்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழி வழியாக இலங்கைக்குள் பிரவேசித்த 26 அகவைக்கொண்ட ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த இலங்கையர் 2008 ஆம் ஆண்டு, கட்டுநாயக்க வானூர்தி தளம் ஊடாக, நாட்டை விட்டு வெளியேறி, தமிழ்நாட்டின் புனர்வாழ்வு முகாம் ஒன்றில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர், 2021, ஆகஸ்ட் 8 ஆம் திகதி, தமிழகத்திலிருந்து மீன்பிடி படகில் நாடு திரும்பியதாகவும், யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து அவரை கண்டறிந்த காவல்துறையினரும், சுகாதார அதிகாரிகளும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுதலுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் பின்னர், அவர் மீது குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
