கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தேங்கியிருந்த 26 சடலங்கள் சூடுபத்தினசேனையில் அடக்கம்
கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் 2017 தொடக்கம் தேங்கியிருந்த 26 சடலங்கள் மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனையில் நேற்று (11) இரவு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்துள்ளார்.
இந்த உடல்கள் நல்லடக்கம் தொடர்பாக இன்று(12) பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் தேங்கி கிடந்த 40 சடலங்களை மட்டக்களப்பு ஓட்டமாவடி - சூடுபத்தினசேனையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை அடக்கம் செய்ய அரசாங்கத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யுமாறு கொழும்பு மாளிகாவத்தை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து நேற்று இரவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஓட்டமாவடிக்கு 26 சடலங்கள் கொண்டுவரப்பட்டதையடுத்து அவை இரு கிடங்குகளில் பரப்பப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கோவிட் தொற்றினால் உயிரிழந்த 1537 பேரின் ஜனாஸாக்கள் மற்றும் உடல்களை இதுவரை அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து அதிகளவான சடலங்கள் வருவதனால் அதனை புதைப்பற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த இடப்பற்றாக்குறை தொடர்பாகக் கடந்த சில தினங்களாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அரசியல்வாதிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவும் இந்த பகுதியில் எதிர்வரும் சிலநாட்களின் பின்னர் சடலங்கள் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.