அறுவடைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்
அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, ஹம்மிலாவ பகுதியில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறை காரணமாக, சுமார் 25 ஏக்கர் பரப்பளவிலான வயல் நிலங்கள் நீர் இன்றி முற்றாகக் கருகி அழிந்துள்ளதாக விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் இருந்த நெற்பயிர்களே இவ்வாறு அழிந்து போயுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்.
நீர் இன்றி கருகிய 25 ஏக்கர் நெற்பயிர்கள்
இது குறித்து விவசாயிகள் மேலும் தெரிவிக்கையில், "இம்முறை நெற்செய்கைக்காக ஒரு ஏக்கருக்கு சுமார் 100,000 ரூபாய் வரை செலவு செய்து மிகவும் அர்ப்பணிப்புடன் பயிர்களைப் பராமரித்து வந்தோம்.
உரம், விதை நெல், உழவுப் பணிகள் எனப் பெரும் தொகையை முதலீடு செய்திருந்தோம். இன்னும் ஒரு மாதத்தில் அறுவடையை எதிர்பார்த்திருந்த வேளையிலேயே, இந்த நீர் பற்றாக்குறை எங்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. ஒட்டுமொத்தப் பயிர்களும் நீர் இன்றி இற்றுப் போய்விட்டன" என குறிப்பிட்டுள்ளனர்.

விவசாயத்தை மட்டுமே முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்தப் பகுதி மக்கள், அறுவடைக்கு கைக்கெட்டிய பயிர் வாய்க்கெட்டாமல் போனதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட தமக்கு உரிய நட்டஈட்டைப் பெற்றுத்தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்தப் பகுதிக்கான விவசாய நீர் விநியோகத்தை முறையாக மேலாண்மை செய்ய உரிய தரப்பினர் முன்வர வேண்டும் எனவும் ஹம்மிலாவ பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.