முல்லைத்தீவு மாவட்டத்தில் 2180 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்த மழை வெள்ளத்தினால் இன்று வரை 2180 ஏக்கர் நெற்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிப்பு விபரங்களைத் திரட்டும் நடவடிக்கையில் விவசாய திணைக்களம் ஈடுபட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட பதில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை 53 ஆயிரத்து 255 ஏக்கர் நெற்செய்கையினை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட போதும் 38 ஆயிரத்து 370 ஏக்கர் பயிர்செய்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, வெலிஓயா பிரதேசங்களின் கீழ் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களாகப் பெய்த மழை காரணமாக 2180 ஏக்கர் அளவான நெற்பயிர்செய்கை வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் 15 நாள் பயிர்களாகவும், சில இடங்களில் 25 தொடக்கம் 30 நாள் பயிராகவும் காணப்படுகின்றன.
சில விவசாயிகளின் வயல்கள் முழுமையாக அழிவடைந்த நிலையிலும் மீண்டும் அவர்கள் மறுத்து விதைக்கத் தீர்மானித்துள்ளார்கள். அவர்களுக்கு மூன்று மாதம் அல்லது இரண்டரை மாத நெல்லினை விதைக்கப் பரிந்துரை செய்துள்ளோம். மழைவெள்ளம் வடிந்தோடி வருகின்றன.
குறிப்பாக நந்திக்கடல், சாலைக்கடல் மற்றும் முல்லைத்தீவு நகர்பகுதி, நாயாற்று கடல்நீர் ஏரி, மன்னாகண்டல், மல்லிகைத்தீவு, பேராறு போன்ற ஆற்றங்கரையினை அண்டிய பகுதிகள் தாழ்நில பிரதேசங்களில் தற்போது நீர் வழிந்தோடி வருகின்றன.
பெரியளவில் பாதிப்பு
இல்லாத நிலையில் விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
