இலங்கையில் வீதி விபத்துகளால் 2100க்கும் அதிகமானோர் பலி
இலங்கையில் நடப்பாண்டில் இதுவரை ஏற்பட்ட வீதி விபத்துகளில் 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், தினமும் சராசரியாக 7 முதல் 8 பேர் வரை உயிரிழப்பதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
வாகனம் ஓட்டும்போது ஏற்படும் சிறு கவனக்குறைவு, அதிக வேகம் அல்லது தவறான முடிவு, ஒரு குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரத்தை இழக்கச் செய்யக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எனவே, அதிக வேகம் மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகள் மற்றும் சமிக்ஞைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் தலைக்கவசத்தையும், ஏனைய வாகனங்களில் பயணிப்போர் ஆசனப் பட்டியையும் கட்டாயம் அணிய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், வாகனச் சாரதிகள் பொறுப்புடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களைச் செலுத்துமாறும் அவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.