பைடன் முறையாக 20ம் திகதி பதவியேற்பார்! ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் எதிர்வரும் 20ம் திகதி முறையான அதிகார மாற்றம் நடைபெறும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர் எதிர்வரும் 20ஆம் திகதியன்று முறைப்படி அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
எனினும் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். அத்துடன் இதுபற்றிய வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டிருந்தநிலையில் நேற்று நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 52 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப பைடன் வெற்றியாளர் என அமெரிக்க நாடாளுமன்றம் முறைப்படி சான்றளித்து உள்ளது.
இதனையடுத்து முறைப்படியான அதிகார மாற்றத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.அதன்படி வரும் 20ம் திகதி அமெரிக்காவில் முறையான அதிகார மாற்றம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.