2028 ஒலிம்பிக்: திருநங்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்ட முக்கிய தடை
சர்வதேச ஒலிம்பிக் பேரவை (IOC), 2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான விளையாட்டுப் பிரிவுகளில் திருநங்கைகள் (Transgender Women) பங்கேற்பதற்குத் தடை விதித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, உயிரியல் ரீதியான பெண்களுக்கு இணையான உடல்வலிமை திருநங்கைகளிடம் இருப்பதாகக் கூறி, அவர்கள் பெண் விளையாட்டு வீரர்களுடன் போட்டியிடுவது குறித்துப் பெரும் சர்ச்சைகள் நிலவி வந்தன.
அதிரடி முடிவு
இந்த நிலையில், விளையாட்டுப் போட்டிகளில் நேர்மையையும் (Fairness), உயிரியல் ரீதியான பெண்களுக்கான சம வாய்ப்புகளையும் உறுதி செய்யும் பொருட்டு, பெண்களுக்கான போட்டிகள் இனி 'உயிரியல் பெண்களுக்கு' (Biological Females) மட்டுமே என வரையறுக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.

இந்த அதிரடி முடிவானது சர்வதேச விளையாட்டுத் துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உயிரியல் ரீதியான பெண் வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பலர் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகள் இது ஒரு பாரபட்சமான நடவடிக்கை என்று கவலை தெரிவித்துள்ளன.
இறுதி முடிவு
இருப்பினும், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மற்றும் பல்வேறு விளையாட்டுச் சங்கங்களின் ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் பேரவை விளக்கியுள்ளது.

இதன் மூலம், இனிவரும் காலங்களில் ஒலிம்பிக் தடகளம், நீச்சல் உள்ளிட்ட அனைத்து முக்கியப் போட்டிகளிலும் பெண்களுக்கான பிரிவில் புதிய தகுதிக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.