2027 உலகக் கிண்ணம் இலக்கு: ஓய்வு குறித்த வதந்திகளுக்கு ரோஹித் சர்மா முற்றுப்புள்ளி!
தனது சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எழுந்துள்ள வதந்திகளை மறுத்துள்ள முன்னாள் இந்திய அணி தலைவர் ரோஹித் சர்மா, நாட்டுக்காக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிப்பது மட்டுமே தற்போது தனது ஒரே குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா 110 பந்துகளில் 138 ஓட்டங்கள் விளாசினார்.
ரோஹித் சர்மா
இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டி ரோஹித்தின் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கலாம் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே 39 வயதான ரோஹித் சர்மாவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் 2027 ஐசிசி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடத் திட்டமிட்டுள்ளதாக ரோஹித் ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஒருநாள் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்த ரோஹித்தின் ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த சதம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
எனினும், இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து அவருக்கு முழு ஆதரவை வழங்கி வருகிறது.
இந்திய அணி
இதுகுறித்து பிசிசிஐ (BCCI) இணையதளத்திற்கு அளித்த நேர்காணலில் ரோஹித் சர்மா கூறியிருப்பதாவது: "பேட்டிங் செய்வது, களமிறங்கி விளையாடுவது, எனது நாட்டை மற்றும் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமே எனது வேலை.
கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதல் எனக்கு இதுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது, அதைத்தான் நான் தொடர்ந்து செய்யப் போகிறேன். நான் அறிமுகமான காலத்தில் இருந்தே என்னைச் சுற்றி இந்த சலசலப்புகள் (Noise) இருந்துகொண்டுதான் இருக்கின்றன. நான் விளையாடும் வரை இது இருக்கத்தான் செய்யும்.

எனவே, இதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. களத்தில் நான் என்ன செய்கிறேன், அணியின் வெற்றிக்கு எப்படிப் பங்களிக்கிறேன் என்பது மட்டுமே முக்கியம். சலசலப்புகள் இருக்கட்டும், அது இல்லையென்றால் சுவாரஸ்யமே இருக்காது."
இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் சிறப்பான சதத்தையும் மீறி, இந்திய அணி தோல்வியைத் தழுவி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. அடுத்ததாக, இந்திய அணி ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
அதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
காலிமுகத்திடலில் அதிரவைத்த கால்பந்து உற்சாகம்! இறுதிப் போட்டியை நேரலையாகக் கண்ட பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள்