2026ம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஜனவரி ஆறாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க தீர்மானம்
2026ம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வை வரும் ஜனவரி ஆறாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று (31) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதன்பிரகாரம் நாடாளுமன்றம் ஜனவரி 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கூடவுள்ளது.
நேர ஒதுக்கீடு
2026 ஜனவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மு.ப. 11.30 மணி முதல் பி.ப. 3.30 மணி வரை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 2371/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் 2428/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
விவாதத்திற்கு வரும் தீர்மானம்
பி.ப. 3.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2025.12.28 ஆம் திகதி 2468/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பான தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்றைய தினம் பி.ப. 5.30 மணிக்கு ஒழுங்குப் புத்தக இல. 3 இல் திகதி குறிப்பிடப்படாததாக சேர்க்கப்பட்டுள்ள ‘மாகாணசபைத் தேர்தல்கள் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழு’ ஒன்றை நியமிப்பதற்கான பிரேரணையை அங்கீகரிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |