2023 ஐசிசி உலகக் கோப்பை: உறுதியற்ற நிலையில் பாகிஸ்தான்
2023 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர்வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்தத் தொடருக்கான அட்டவணை இதுவரை ஐசிசியால் அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் யுத்தம் தான் என்று கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் வந்து விளையாட தயக்கம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பிசிசிஐ பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை தென்னிந்தியாவில் நடத்த ஒப்புக்கொண்டது. இதனால் இந்தியாவுக்கு வருவது குறித்து உறுதி அளிக்குமாறு ஐசிசி கூறி இருந்தது.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 'தாங்கள் இந்தியாவுக்கு வருவதும் வராததும் எங்கள் நாட்டின் அரசு கையில் இருக்கிறது' என கூறியுள்ளது.
மேலும் “எங்கள் நாட்டு அரசு வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு விளையாட அனுமதி தராமல் கூட போகலாம்” என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
நிலையான அரசு இல்லை
மேலும் பாகிஸ்தானில் தற்போது நிலையான அரசு இல்லாததால் தற்போதைய அரசாங்கம் அனுமதி அளித்தாலும் ஒருவேளை வேறு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் இந்தியா செல்ல அனுமதி தராமலும் போகலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இந்தியா வந்து விளையாடுவதில் தங்களுக்கு சிக்கல் இருப்பதாகவும் உறுதியாக தற்போது வரை எதுவுமே கூற முடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கு ஆறு முதல் 8 மாதங்கள் முன்பே அட்டவணையை வெளியிடுவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உறுதியான பதிலை அளிக்காததால் பிசிசிஐ தனது முடிவில் தயக்கம் காட்டி வருகிறது.
ஒருவேளை அட்டவணையை வெளியிட்ட பிறகு பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் இருந்து விலகினால் அது பெரும் நஷ்டத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |