ரஷ்யா - உக்ரைன் போர்! - இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
ரஷ்யா - உக்ரைன் போரினால் முழு உலகமும் மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையும் அவ்வாறானதொரு சூழலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த நிலைமையை நோக்கி அரசாங்கம் கண்ணை மூடிக் கொள்ளாமல், வரக்கூடிய உலகளாவிய மந்தநிலைக்கு முகங்கொடுக்க நாட்டை தயார்படுத்த வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
"உலகம் ஒரு மந்தநிலைக்கு தள்ளப்படுகிறது, இது வரலாற்றில் மிக மோசமானதாக இருக்கலாம். ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கிய பிறகு, உலகளாவிய மந்தநிலைக்கான அறிகுறிகள் உள்ளன.
ரஷ்யா ஒரு நாளைக்கு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களை போருக்காக செலவிடுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் பிற நாடுகளும் உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களை வழங்குகின்றன.
அதன்படி, முழு உலகத்தின் நிதி வலிமை இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு உலக சந்தையில் இல்லை என்பதால் பல நாடுகள் அரபு பிராந்தியத்தில் இருந்து அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை கோருகின்றன.
இதனால் மேலும் விலை உயர்வு ஏற்படக் கூடும். 2014க்குப் பிறகு கச்சா எண்ணெய்க்கான அதிகபட்ச விலை சமீபத்தில் பதிவு செய்யப்பட்டு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. உலகளாவிய நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு பீப்பாய் விலை 2022 மார்ச் நடுப்பகுதியில் 120 அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் விலை உயர்வால் மற்ற அனைத்து பொருட்களின் விலையும் உயரும். பல நாடுகள் மந்தநிலைக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வது போல் தெரிகிறது, ஆனால் இலங்கையில் இருந்து அத்தகைய தயார்நிலையை எங்களால் பார்க்க முடியாது,” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, அந்நிய செலாவணி சிக்கலைத் தீர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவும் தாமதமாகவே வந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.