கொள்ளுப்பிட்டியில் அதிரடிப்படையினர் போல் நடித்து 20 லட்சம் ரூபா கொள்ளை
மூன்று நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் போல் நடித்து, இரண்டு பேர் பயணித்த கெப் வண்டியை நிறுத்தி அவர்களிடம் இருந்த 20 லட்சம் ரூபா பணம் அடங்கிய பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுளள்னர்.
இந்த சம்பவம் நேற்று மாலை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நடந்துள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களே இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்ற நபர்களை கெப் வண்டியில் சென்றவர்கள் துரத்திச் சென்று ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளனர்.
அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் கீழே விழுந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பின்னால், அமர்ந்து சென்ற நபர், மோட்டார் சைக்கிளை இயக்கி, பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பணப் பையை எடுத்துச் சென்ற நபர் பொலிஸார் அணி தலைகவசம் போன்ற தலை கவசத்தை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நபரை கெப் வண்டியில் சென்றவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நபர் கொழும்பு கிருளப்பனை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
20 லட்சம் ரூபாவுடன் தப்பிச் சென்ற நபர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.