மாலியில் இலங்கை இராணுவத்தினரால் 20 கிலோ வெடிகுண்டு கண்டுபிடிப்பு
மாலி மாநிலத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தின் போர் வாகன பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குழு பயங்கரவாத அமைப்பினால் புதைக்கப்பட்ட 20 கிலோ எடையுள்ள வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மாலி மாநிலத்தில் டெஸ்ஸாலிட் முதல் காவ் வரையிலான தேடுதல் நடவடிக்கையின் போது, இராணுவத்தின் போர் வாகன பாதுகாப்பு பிரிவின் 4வது குழு, பாலைவன மணல் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டை கண்டுபிடித்தது.
மேலும், உயர் வெடிமருந்துகள் அடங்கிய பிளாஸ்டிக் சாதனம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன், அமைதிப்படையின் வாகனத் தொடரணியை குறிவைத்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதம் 22 ஆம் திகதி, டெஸ்ஸாலிட் நகருக்கு அமைதிப் பேரணி ஒன்று சென்று கொண்டிருந்த போது, வீதியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியால் இராணுவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில், இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்தனர்.
இராணுவத்தின் போர் வாகன பாதுகாப்புப் பிரிவின் படையினர் தமது உயிருக்கு ஆபத்தை பொருட்படுத்தாமல் விழிப்புடனும் பொறுப்புடனும் தமது கடமைகளைச் செய்வதாக பாராட்டப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

