20 நாள் பச்சிளம் குழந்தையை விற்ற தாய்..! பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்
பல்லமாவின் கம்மண்டலுவ பகுதியில், 20 நாள் பச்சிளம் குழந்தை ஒன்று ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குழந்தையைப் பெற்றெடுத்த 25 வயது தாய் மற்றும் பணத்திற்காக குழந்தையை வாங்கிய பெண் உட்பட ஒரு குழுவினரை புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைக்குப் பிறகு, சந்தேக நபர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணையில் தெரியவந்தபடி, அந்த இளம் தாய் போதைக்கு அடிமையான ஒருவருடன் உறவில் இருந்ததும், அவர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

குழந்தையைப் பராமரிக்க அவர்களிடம் நிதி வசதி இல்லாததால், குழந்தை பிறப்பதற்கு முன்பே திட்டமிடப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொகைக்கு, குழந்தையை மற்றொரு நபருக்கு விற்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, குழந்தை பிறந்த பிறகு, அதை மற்றொரு நபரிடம் ஒப்படைக்க அந்தத் தாய் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குழந்தை பரிவர்த்தனை
பணத்திற்காக வாங்கப்பட்ட குழந்தை, மதுரங்குலிய, கடயமொட்டையைச் சேர்ந்த, 18 ஆண்டுகளுக்கும் மேலாகத் திருமணமாகி பிள்ளைகள் இல்லாதவருமான ஒரு பெண்ணால் தத்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக குறித்த பெண்ணின் கணவர் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார் எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வமான தத்தெடுப்பு நடைமுறையை முற்றிலுமாக மீறி, இந்தக் குழந்தை பணத்திற்காகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டும் பொலிஸ், குழந்தையைப் பெற்றெடுத்த தாயையும், குழந்தையை வாங்கிய பெண்ணையும், இந்தச் செயலில் ஈடுபட்ட பலரையும் கைது செய்துள்ளது.
புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தசம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.