வரவு செலவுத்திட்டம் தொடர்பான காலத்தில் நாடாளுமன்றத்தின் செலவு 20 கோடி ரூபா
நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்ற காலத்தில் நாடாளுமன்ற கூட்டங்களுக்காக சுமார் 20 கோடி ரூபா செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 நாட்களுக்கு சுமார் 20 கோடி ரூபா செலவு
நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான உணவு, எரிபொருள், மின்சாரம், குடிநீர், சம்பளம், கொடுப்பனவுகள் ஆகியவற்றுக்காக இந்த பணம் செலவாகியுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் 20 நாட்கள் நடைபெற்றது.
வரவு செலவுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதன் பின்னர் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் முறைவாசிப்பின் மீதான விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி நவம்பர் 22 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் நடைபெற்றது.
வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதங்கள் நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் கடந்த 8 ஆம் திகதி வரை 13 நாட்கள் நடைபெற்றன.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட நாடாளுமன்ற அமர்வு கடந்த 13 ஆம் திகதி நடைபெற்றது. கேள்விகளை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமல்லாது பதிலளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அன்றைய அமர்வில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்த ஒரு நாள் கூட்டத்திற்காக மாத்திரம் சுமார் ஒரு கோடி ரூபா செலவாகியதாக கூறப்படுகிறது.