இலங்கையிலிருந்து சென்ற நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடியில்(Dhanushkodi) தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் மன்னாரில் இருந்து படகில் சென்று நேற்று (30) காலை தனுஷ்கோடி மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.
மணல் திட்டில் நின்று கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் நால்வரை மண்டபம் இந்திய கடலோர காவல்படை ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மெரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஒப்படைக்கப்பட்ட நால்வரையும் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் இலங்கை தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தினசரி ஒரு குடும்பத்தில் ஒரு நேரம் மட்டும் சாப்பிட முடிவதாகவும், இலங்கையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வாழ முடியாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வரும் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராஜூகரன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |