அழிவின் விளிம்பில் முடிவின் எல்லையில் ஈழப்போராட்டத்தின் இரு காலங்கள்
உரிமைகள் கோரி, வாழ்வையும் இருப்பையும் நிலை நாட்டி, பிறந்த மண்ணில் வாழ்ந்து விட, நடைபெற்ற விடுதலைப்போராட்டங்கள் இந்த உலகத்தில் அதிகம்.
அவற்றுள் ஒன்று தமிழீழத்தின் உருவாக்கத்தை இலக்காக கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.
நாட்டுப்பற்றாளர்களின் அரும்பெரும் முயற்சியினால் தாங்கப்பட்டு முன்னகர்ந்து கொண்டிருந்த இந்த போர் தன் வரலாற்றில் இரு வேறு காலங்களை அழிவின் விளிம்பில் முடிவின் எல்லையில் நின்று கண்டு கொண்டது.
ஒன்றில் இருந்து மீண்டு வந்த போதும் மற்றொன்றில் அது மௌனிக்கப்பட்டு போனது. துரோகமும் விட்டோடலும் அதிகம் நிறைந்திருந்த விடுதலைப்போராட்டத்தில் அசைபோட்டு குறிப்பெடுத்து முன்னகர நிறையவே அனுபவ நிகழ்வுகள் உள்ளன.
நாட்டுப்பற்றாளர் தினம்
அன்னை பூபதி என்ற பெயர் ஈழப்போராட்டத்தின் நாட்டுப்பற்றாளர்களை குறியீடு செய்துகொள்ளும் ஒரு பெயராக மாறிவிட்டது.
தமிமீழ தேசியத் தலைவரினால் 2006 ஆம் ஆண்டில் அன்னை பூபதியின் நினைவு நாளான ஏப்ரல் 19ம் நாள் "தமிமீழ தேசிய நாட்டுப்பற்றாளர் நினைவு நாளாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு இனத்தின் உணர்ச்சி மிக்க உரிமைப் போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டு அது விரிவாக்கப்பட்டுச் செல்லும் போது நாட்டுப்பற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது செல்லுகின்றது.
அன்னை பூபதிக்கு முன்னரும் பல நாட்டுப்பற்றாளர்கள் தோன்றியிருந்தனர். அவர்களும் நாட்டுக்கு அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளனர்.அது போலவே அன்னை பூபதிக்கு பின்னர் 2006 ஆம் ஆண்டு வரையும் பல நாட்டுப்பற்றாளர்கள் நாட்டுக்காக தங்கள் சேவைகளை செய்து வந்திருந்தனர்.பலர் தங்கள் உயிர்களையும் ஈகம் செய்துள்ளனர்.இத்தகைய நாட்டுப்பற்றாளர் களின் பங்களிப்பு விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்தவாறே உள்ளது.
தாயக விடுதலைப் போராட்டத்தில் போராளிகளாக இணைந்து இயங்கி தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். அவர்களை மாவீரர்கள் என சிறப்பித்து மாவீரர் நாளினை நினைவு கொண்டு அவர்களின் உயிர் ஈகத்தினை மதித்து வருகின்றமை ஈழத்தில் வழமையானது.
விடுதலைப் போராட்டத்திற்காக மக்கள் மத்தியில் இருந்தவாறு மக்களோடு மக்களாக சேர்ந்து இயங்கி நாட்டுப்பற்றால் போராடி வரும் உன்னதமானவர்களையே நாட்டுப்பற்றாளர் என குறிப்பிடலாம்.
அந்த உணர்சி மிக்க விடுதலைப் போராட்டத்தினை தாங்கி நிற்கும் தூண்களாக நட்டுப்பற்றாளர்களே இருந்து வருகின்றனர்.இந்த புரிதலின் விளைவே தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நாட்டுப் பற்றாளர்களை கௌரவித்து அவர்களது செயல்களுக்கு அவற்றின் பெறுமதிக்கு மதிப்பளிக்கும் வழிமுறைகளும் உருவாக்கப்பட்டு இருந்தன.
அன்னை பூபதியை நாட்டுப்பற்றாளர்களின் குறியீடாக தெரிவு செய்ததன் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் பாதை; வன்முறைகளை தவிர்த்து முடிந்தளவில் சனநாயக முறைகளில் தமது உரிமைகளை வென்றெடுத்து விடவே விடுதலைப்புலிகள் தங்கள் நகர்வுகளை நகர்த்தியிருந்தனர்.
கெரில்லா போர்முறை
அவற்றின் மற்றொரு பரிமாணமாகவே அவர்கள் கெரில்லா போர் முறைகளில் இருந்து மரபுவழி இராணுவமாக தங்களை தகவமைத்து வந்திருந்தனர்.
மரபுப்போர் முறையானது கெரில்லா போர்முறைகளில் இருந்து பாரியளவிலான வேறுபாட்டைக் கொண்டுள்ளது.கெரில்லா போர் முறைகளில் சர்வதேச போரியல் சட்டங்களுக்கு அதிகளவில் கட்டுப்பட வேண்டிய தேவை இல்லை.
மரபுமுறை இராணுவமாக தம்மை கட்டமைத்துக்கொள்ளும் போது இவ்வாறான போரியல் சர்வதேச சட்டமுறைகளுக்கு தம்மை கட்டுப்படுத்திக்கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்புணர்வை அவை பெறுகின்றன.இந்த விடயங்களை விடுதலைப்புலிகள் நன்றாகவே உணர்ந்து செயற்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளின் நிலங்கள் குறுகிக் கொண்டு போன போது அவர்கள் தங்கள் போராட்ட வடிவத்தினை கெரில்லா போர்முறைக்கு மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.அனாலும் அவ்வாறு ஒரு முயற்சியில் அவர்கள் இறுதிவரை ஈடுபடவில்லை என்பது அவர்கள் தங்கள் உரிமைகளை சனநாயக முறைகளில் வென்றடுப்பதையே அதிகம் விரும்பிருக்கின்றனர்.
மனித உரிமை மீறல்களை தவிர்த்து அவற்றை மதித்து நடப்பதோடு அவை மீறப்படும் போது அவற்றுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டும் உள்ளது.போரியல் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்கவும் வேண்டும்.போரியல் சட்டங்களை மீறும் போதும் பொறுப்பு கூறல் கடப்பாடு உண்டு.எனினும் நடப்பில் அத்தகைய உடன்பாடுகளில் கைச்சாத்திட்டாலே அவை கைச்சாத்திட்டவர்களை கட்டுப்படுத்தும் என்ற யதார்த்தத்திற்கு பொருந்தாத நடைமுறைகளும் இருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் அவர்களின் வளர்ச்சி போக்கில் அவர்கள் மரபுவழி போர்முறை இராணுவ கட்டமைப்புக்கு தம்மை மாற்றிக்கொள்ளும் போது தன்னிச்சையாகவே மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் போர்க்குற்ற சட்ட வரம்புகளை கருத்திலெடுத்தே நகர்ந்திருந்திருனர்.
ஆனாலும் உலகின் பார்வையில் அவர்கள் பயங்கரவாதிகள் என குற்றம் சுமத்தப்பட்டு இன்றளவும் பல நாடுகள் தடை விதித்துள்ளமையானது விடுதலைப்புலிகளின் ஆரம்பம் முதல் இற்றை வரைக்குமான அவர்களின் செயற்பாடுகளின் பொறுப்புணர்ச்சிகள் புரிந்து கொள்ளப்படாமையின் விளைவே ஆகும்.
மற்றொரு வகையில் இவை பேசப்படுமளவு போதியதாக இல்லை.அதாவது மனிதாபிமானத்தை ஒப்பந்த கைச்சாத்திடல் இல்லாது தனிச்சையாகவே பின்பற்றி தன் இருப்புக்காக போராடும் ஒரு அமைப்பு எப்படி பயங்கரவாத அமைப்பு என விழிக்கப்படமுடியும்?
இக்கட்டில் விடுதலை போர்
1987 இல் நடைபெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய அமைதிப் படை இலங்கையில் தரையிறங்கியது. இலங்கை அரசுடன் சேர்ந்து இந்திய அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் நடைமுறைக்கு வர ஆரம்பித்திருந்தன.
இலங்கையில் இருந்து வந்த இன முரண்பாட்டுக்கு இந்திய அரசாங்கம் தீர்வை முன்வைத்து இலங்கையில் அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் பிராந்தியத்தில் தனது செல்வாக்கினை நிலைநிறுத்தி கொள்ள முயன்றிருந்தது." விடுதலைப்புலிகளின் கொள்கைக்கு முரணாக இந்திய அமைதிப்படையின் நகர்வுகள் நாளடைவில் மாற்றம் அடைந்து கொண்டிருந்தது. இந்த நிலை மாற்றம் விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டையும் மாற்றியிருந்தது.
இந்திய அமைதிப்படையோடு மோதல் நிலை தொடங்கியது.மிகவிரைவில் இந்த மோதல் நிலை தீவிர நிலையை எட்டியது. விடுதலைப்போராட்டம் மணலாற்று காட்டிற்குள் சுருங்கிக் கொண்டது.வரலாற்றில் விடுதலைப்புலிகள் மீதான இந்திய அமைதிப்படையின் அழித்தொழிப்பு யுத்தம் இறுதிக்கட்டத்தை நித்தகைக்குளம் மற்றும் அதனையண்டிய மணலாற்று காடுகளில் நடந்தேறிக்கொண்டது.
இந்த இக்கட்டான சூழலில் தான் தங்கள் இருப்பிடங்களை எதிரி நெருங்கி விடாது தடுத்து நிறுத்தும் ஒரு போரியல் உபகரணமாக யொனி மிதிவெடியை புலிகள் உருவாக்கியிருந்தனர்.
முடியாது என்றபோதும் முடியும் என்ற நம்பிக்கையோடு விடுதலைப்போரை தலைவர் மேதகு வே.பிரபாகரன் நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலைமை முள்ளிவாய்க்கால் இறுதிப்போருக்கு எந்தவகையிலும் குறைந்தது இல்லை.முள்ளிவாய்காலில் விடுதலைப் போராளிகளோடு போர் வலயத்தில் பொதுமக்களும் சிக்கிக் கொண்டிருந்தனர்.ஆனால் அன்றைய போரில் விடுதலைப் போராளிகள் மட்டுமே போர் வலயத்தில் சிக்கிக்கொண்டு அழிவின் விளிம்பில் நின்று போராடிக்கொண்டு இருந்தனர்.
அன்னையர் முன்னணி
அழிவின் விளிம்பில் முடிவின் எல்லையில் விடுதலைப்போராட்டம் வந்து நின்று கொண்டது.
களத்தில் கடும் போர் நடந்துகொண்டிருந்த சமநேரத்தில் அன்னையர் முன்னணியின் அறப்போர் நடந்துகொண்டிருந்தது.
இந்திய இராணுவ அதிகாரிகளுடன் அன்னையர் முன்னணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.நடந்துகொண்டிருந்த போரை நிறுத்திக்கொள்வதன் மூலம் விடுதலைப் போராளிகள் மீதான அழித்தொழிப்பை தடுத்து விடுதலைப் போரை காத்து விடலை அது நோக்காக கொண்டிருந்தது.
இந்த நோக்கத்தினை அன்னை பூபதியின் இரு அம்சக் கோரிக்கைகள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன.
இதனை மற்றொரு முறையில் சொல்வதானால் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான விடுதலைப் போராட்டம் அழிந்துபோவதை தடுத்து நிறுத்துவதற்காக அன்னையர் முன்னணி போராடிக் கொண்டிருந்தது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அன்னையர் முன்னணியின் இந்த முயற்சி விடாமுயற்சியாக இருந்தது.
முறிந்த பேச்சுவார்த்தைகள்
அன்னையர் முன்னணியினர் போரை நிறுத்துவதற்காக இரண்டு பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். ஒன்று திருகோணமலையிலும் மற்றையது கொழும்பிலுமாக இவை அமைந்துள்ளன.
இந்த பேச்சுவார்த்தைக்கான தூண்டலாக தமிழ் பெண்களால் உருவான அன்னையர் முன்னணியின் உண்ணாவிரத போராட்டத்தின் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தன.
இந்திய அமைதிப்படையின் அதிகாரிகள் அன்னையர் முன்னணியுடன் பேசுவதற்காக திருகோணமலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இது 1988 சனவரி 4 இல் நடந்திருந்தது.எனினும் அந்த அழைப்பு வீண் போயிருந்தது.
அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் அதன் விளைவாக ஏற்கப்பட்ட கோரிக்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை.
இதனால் மீண்டு போராட்டம் தொடர்ந்தது.மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அன்னையர் முன்னணி கொழும்புக்கு அழைக்கப்பட்டது.1988 பெப்ரவரி 10 இல் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆயினும் பேச்சுவார்த்தை அன்னையர் முன்னணியின் சார்பாக அமையாததால் அது முறிவடைந்து வீணாகி போனது.
இந்த முயற்ச்சிகள் தோல்வியை தழுவியதால் தங்களின் தன்னிச்சையான நகர்வாக உண்ணா நோன்பினை ஆரம்பிக்க முடிவெடுத்தனர்.
எப்போதுமே நாம் நமக்காக நடக்கும் போது நாம் நமது சொந்த புத்தியில் தனித்து நடக்க வேண்டும்.அது மட்டுமே நேரத்தை வீணாக்காது இலக்கை நோக்கிய நகர்வை உறுதிப்படுத்தும் என்பது அன்னையர் முன்னணியின் இந்த தோல்வி மீண்டும் ஒரு முறை எடுத்தியம்பியுள்ளது.
1987 இல் திலீபனின் சாகும்வரையான உண்ணா நோன்பு ஏற்படுத்திய தாக்கத்தை அன்னையர் முன்னணியின் சாகும் வரையான உண்ணா நோன்பு முன் நகர்வுகளிலும் எதிரொலித்ததை அவதானிக்கலாம்.
உண்ணா நோன்பின் தாக்கம்
இந்திய அமைதிகாக்கும் படையினருடன் தமிழீழ விடுதலைப்புலிகள் போரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சம நேரத்தில் இந்திய அமைதிகாக்கும் படையை எதிர்கொள்ளும் மாற்று வழிகளையும் புலிகள் வகுத்திருந்தனர்.
ஜே.ஆர் ஜெயவர்த்தனே உடன் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்நியிருந்த பிராந்திய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கை நிலைநாட்டும் நகர்வாக அமைந்த வெளிவிவகார கொள்கை முன்னெடுப்பில் இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 இல் நடைபெற்றிருந்தது.
ராஜீவ் காந்தியின் தாயாரன இந்திரா காந்தியின் வெளிவிவகார கொள்கையை அடியொற்றிய ராஜீவ்காந்தியின் நகர்வுகள் அவரின் அரசியல் முதிர்ச்சி இன்மையால் பிராந்திய நாடுகளில் அமைதியின்மையை ஏற்படுத்தியதோடு ஈற்றில் அவரின் இருப்புக்கும் அது ஆபத்தாக முடிந்திருந்தது.
நீரும் உணவும் இல்லாது திலீபனால் முன்னெடுக்கப்பட்டிருந்த உண்ணா நோன்பினை இந்தியா கையாண்ட முறை பிராந்திய அரசியலில் ராஜீவ்காந்தியின் முதிர்ச்சியின்மையையே வெளிக்காட்டி நிற்கிறது.
இந்த இடத்தில் இந்திய உளவு அமைப்பான றோவும் கூட தோல்வியடைந்ததாகவே கருத வேண்டும். இல்லையெனில் பாரிய பின்னடைவுகளோடு அவமானத்தையும் வெகு மானமாக கொண்டு இந்திய அமைதிப்படை தன் தாய்நாடு திரும்பியிருக்காது.வந்த நோக்கம் நிறைவேறாது அதற்கும் மேலாக புதிய பிராந்திய பிரச்சினைகளை உருவாக்கி விட்டு இந்திய அமைதிப்படை தன் தாய்நாடு திரும்பியிருந்தது.
இந்தகைய அவலங்களை ஈற்றில் பெற்றிருந்த இந்திய அமைதிப்படையிடம் இரு அம்சக் கோரிக்கைகள் அன்னையர் முன்னணியால் முன்வைக்கப்பட்டது.
சாகும் வரை போராட்டம்
இந்த உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு பலரும் முன் வந்த நிலையில் தெரிவு முறையை பயன்படுத்தி இருந்தனர்.
தெரிவின் போது அன்னம்மா டேவிட் என்ற அன்னை தெரிவாகி உண்ணாநிலை போராட்டத்தினை பெப்ரவரி 16 இல் ஆரம்பிக்கின்றார்.இந்த போராட்டத்தினை சீர்குலைத்து அது தொடராது இருப்பதை நோக்கமாக கொண்டு இயங்கிய அமைதிப்படையினர் உண்ணா நோன்பிருந்த அன்னம்மா டேவிட் டை உண்ணாநோன்பு மேடையில் இருந்து கடத்திச்சென்றிருந்தனர்.
இந்த நடவடிக்கையால் அந்த முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததிருந்தது.
இதன் அனுபவப்படிப்பினை கருத்தில் கொண்டு அன்னம் டேவிட் டைத் தொடர்ந்து கணபதிப்பிள்ளை பூபதி உண்ணா நோன்பினை பெப்ரவரி 19 இல் ஆரம்பிக்கின்றார்.
" சுய நினைவிழக்கும் போது தன்னை தன் பிள்ளைகளோ அல்லது தன் கணவரோ மருத்துவ உதவிகளை வழங்க வைத்தியசாலை கொண்டு செல்லக் கூடாது." என்றும்" தான் தன் சுய விருப்பின் பெயரிலேயே இந்த உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த அணுகலினால் சட்டரீதியாக அன்னை பூபதியின் உண்ணாநிலைப் போராட்டத்தில் தலையீடு செய்ய முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
31 நாட்கள் நீடித்த நீரை அருந்தி உணவை அருந்தாத அன்னை பூபதியின் உண்ணா நோன்பு அவரது 19 ஏப்ரல் 1988 இல் அவரது இறப்போடு முடிவுக்கு வந்திருந்தது. போரினை நிறுத்தி விடுதலை புலிகளோடு பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதே அன்னை பூபதியின் இரண்டு அம்சக் கோரிக்கைகளாக அமைந்தது.
ஈற்றில் இது சாத்தியமற்ற போதும் இந்திய படையினரோடு ஏற்பட்டிருந்த மோதலில் தங்களை தற்காத்துக்கொள்ள விடுதலைப்புலிகளின் பல்முனை நகர்வுகளில் ஏனையவை அவர்களுக்கு கை கொடுத்திருந்தது.
முள்ளிவாய்க்கால் போரில்
தமிழீழ விடுதலைப் போராட்டம் எப்படி கிழக்கிலங்கை மக்களால் அழிவின் விளிம்பில் இருந்து மீட்க துடித்து எடுக்கப்பட்ட போராட்டங்கள் போலவே அதே கிழக்கிலங்கையினைச் சேர்ந்த கருணாம்மானின் துரோகச் செயலால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் விடுதலைப் போராட்டம் முடங்கி போயிருந்தது.
இது காலச் சுழற்சியின் கொடூரமான பக்கங்களாக அமைகின்றன.
அதிகளவான பொதுமக்களோடு விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் சிறிய எல்லைக்குள் முடங்கிக் கொண்டிருக்கும் போது அழிவின் விளிம்பில் முடிவின் எல்லையில் நின்றுகொண்டிருக்கும் போது அன்னை பூபதி போல் அன்னையர் முன்னணி போல் ஒரு செயற்கரிய செயற்பாடு நடைபெற்றிருந்தால் நிலைமைகள் தலைகீழாக மாறியிருக்கும்.
01) உடன் போரை நிறுத்து.
02) பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 03) ஐநா பிரிதிநிதிகளை போர் வலயத்திற்குள் அனுமதி.
04) புலிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடு ஆகிய நான்கு குறைந்தபட்ச தற்காப்பு கோரிக்கைகளையாவது முன் வைத்து உண்ணா நோன்பு இருந்திருக்கலாம்.அப்படி அதற்கு துணிந்த தமிழர்கள் போர் வலயத்திற்கு வெளியில் இலங்கையில் இல்லை என்பதே உண்மை. அழிவின் விளிம்பில் முடிவின் எல்லையில் மௌனிக்கப்பட்டு போனோம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 19 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
