மலையகத்தில் ஆபத்தான முறையில் பேருந்துகளை ஓட்டிச் சென்ற சாரதிகள் கைது!
கண்டியிலிருந்து ஹட்டன் வரை ஒரே திசையில் 2 தனியார் பேருந்துகளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(6) இரவு ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு பேருந்துகளும் கண்டி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தன.
சட்ட நடவடிக்கை
கினிகத்தேனை பகுதியில் பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், 2 பேருந்துகளின் சாரதிகள் ஆபத்தான முறையில் பேருந்துகளை அதிவேகமாக ஓட்டிச் செல்வதை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து, ஹட்டன் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட பொலிஸார், 2 பேருந்துகளையும் ஓட்டிச் சென்ற சாரதிகள் இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுக்கும் எதிராக ஆபத்தான வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








